வருகிற சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;

Update: 2024-11-24 20:15 GMT

கோப்புப்படம் 

தூத்துக்குடி,

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தை பொறுத்தவரை நல்லாட்சிக்கும், நல்ல வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். அதேபோன்று தமிழகத்திலும் பிரதமரின் நல்ல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தரும் காலம் வெகுதொலைவில் இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும்.

வருகிற 25-ந்தேதி (அதாவது இன்று) நாடாளுமன்றம் கூடுகிறது. இதில் கடுமையாக பேசுங்கள் என்று முதல்-அமைச்சர் கூறி அனுப்புகிறார். அப்படி இருந்தால் பேசத்தான் முடியும். செயலாற்ற முடியாது. ஆகையால் மக்கள் 2026-ம் ஆண்டு யார் நல்லது செய்வார்கள்? என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் என்ன செய்தாலும் அரசு கண்டு கொள்ளாது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு எவ்வளவு நாளாகிறது. அதைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

யானை தாக்கி உயிரிழந்ததற்கு அரசு ரூ.2 லட்சம் நிதி வழங்குகிறது. தமிழகத்தில் அதிக நிதி உதவி கிடைக்க வேண்டுமென்றால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்