அ.தி.மு.க. ஆட்சியில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்: விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

துணைவேந்தர் நியமனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-10-22 15:08 GMT

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னராக இருந்த, இன்றைய பஞ்சாப் கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோகித் அப்போதைய அ.தி.மு.க. அரசு மீது பகிரங்கமானதொரு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் 4 ஆண்டுகள் கவர்னராக பணியாற்றிய காலத்தில் தனக்கிருந்த அனுபவம் மிக, மிக மோசமானதாக இருந்ததாகவும், கல்வித் துறையில் பெருமளவிலான ஊழல் தலைவிரித்து ஆடியதாகவும் தெரிவித்ததோடு, 40 கோடி 50 கோடி என பணம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் அளிக்கப்பட்டதாகவும், அவர் பதவியில் இருந்த காலத்தில் 27 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எனவே, துணைவேந்தர் நியமனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்தபோது அதை ஏன் தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது. எனவே, துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்