சேலத்தில் மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்தப்படும்-மேயர் ராமச்சந்திரன் தகவல்
சேலம் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
சேலம் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்துவது, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் வசதிகள், தெரு விளக்கு அமைத்தல், சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனுக்குடன் நிறைவேற்றி தர வேண்டும்.
பள்ளிகள் மேம்படுத்தப்படும்
96 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கட்டிடம், கழிப்பறை, குடிநீர் வசதிகள், ஆய்வகங்கள், மின்சார வசதி, சைக்கிள்கள் நிறுத்துவதற்கான இட வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதன்படி மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.
மண்டல வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் தனசேகர், மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், உதவி ஆணையாளர்கள் ரமேஷ் பாபு, கதிரேசன், சாந்தி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.