திருவள்ளூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

Update: 2022-09-11 13:39 GMT

கொரோனா தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி தமிழகமெங்கும் 36-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 500 தடுப்பூசி மையங்கள் அமைக்க பெற்று 2 ஆயிரம் பணியாளர்கள் மூலம் 55 ஆயிரம் நபர்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுநாள் வரை நடைபெற்ற 35 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 18 லட்சத்து 75 ஆயிரத்து 408 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மக்கள் பயனடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த 18 லட்சத்து 88 ஆயிரத்து 400 பயனாளிகளில் இதுநாள் வரை நடைபெற்ற 35 மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களிலும், நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களிலும் முதல் தவணையாக 18 லட்சத்து 2 ஆயிரத்து 778 பேருக்கும் (95 சதவீதம்), 2-வது தவணை 16 லட்சத்து 34 ஆயிரத்து 934 பேருக்கும் (86.6 சதவீதம்) என மொத்தம் 34 லட்சத்து 37 ஆயிரத்து 712 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஒன்றே தீர்வு

மேலும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி 2 தவணை நிறைவுற்ற நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

இன்று நடைபெறும் 36-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் இதுநாள் வரை தவணைக்கான தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்தி தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்