தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா சிகிச்சை பிரிவு
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது என்று கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறினார்.
கொரோனா சிகிச்சை பிரிவு
பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறியதாவது:-
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு தற்போது தயாராக உள்ளது. இதில் 30 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொண்டதாகவும், 40 படுக்கைகள் தீவிர சிகிச்சைக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் 170 டாக்டர்கள்
ஒருநாளில் அதிகபட்சமாக 1,500 பேருக்கு சோதனை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றுவோரின் தேவைக்காக 43 ஆயிரத்து 500 பாதுகாப்பு கவச உடைகள், 85 ஆயிரத்து 500 முக கவசங்கள் இருப்பில் உள்ளன. சிகிச்சை தேவைக்காக 180 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள், 226 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 1,030 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற 170 டாக்டர்கள், 316 நர்சுகள் தயார் நிலையில் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இப்போது ஒரு நாளில் சராசரியாக 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். முதல் தவணை அல்லது இரண்டாம் தவணை அல்லது பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை செலுத்தி கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.