குமரியில் ஒரு வாரத்தில் 178 பேர் பாதிப்பு: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை ஒத்திகை

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 178 பேர் கொ ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை ஒத்திகை டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில் நடந்தது.

Update: 2023-04-10 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 178 பேர் கொ ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை ஒத்திகை டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில் நடந்தது.

178 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் கடந்த மாதத்தில் இருந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 167 பேர் வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 11 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக 7 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 3 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒத்திகை

இந்தநிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நடந்தது. அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மையத்துக்கு நேற்று காலை 11.30 மணி அளவில் சைரன் ஒலியுடன் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.

அந்த ஆம்புலன்ஸ் கொரோனா பரிசோதனை மையம் முன்பு வந்து நின்றதும் கொரோனா கவச உடை அணிந்து வந்த மருத்துவ பணியாளர்களும், ஆம்புலன்ஸ் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் போன்ற ஒருவரை ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெக்சரில் வைத்து பரிசோதனை மையத்துக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், துணை சூப்பிரண்டு கிங்ஸ்சிலி, உறைவிட மருத்துவ அதிகாரி ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலெட்சுமி, ரெனிமோள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

பரிசோதனை முடிந்ததும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை கொரோனா வார்டுக்கு கொண்டு செல்வது போன்று ஒத்திகை நடந்தது. இதுபோல் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பரிசோதனை செய்வது போன்ற ஒத்திகையும் நடந்தது.

100 படுக்கைகள்

இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது:-

கொரோனா ஒத்திகை இன்று (அதாவது நேற்று) தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நடக்கிறது. இந்த ஒத்திகையின்போது கொரோனா பாதிப்புடன் ஆம்புலன்சில் வரும் நோயாளியை எவ்வாறு வரவேற்க வேண்டும்? எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்? அதிக பாதிப்புடன் வரும் நோயாளிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்க வேண்டும்? அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டு 100 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது. இதில் 20 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு உரியதாகும். தற்போது 3 நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தேவையான அளவு ஆக்சிஜன் வசதி உள்ளது. ஆக்சிஜன் நிலையங்கள் 2 உள்ளது. ஒன்று 24 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்டதும், மற்றொன்று 3 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்டதும் ஆகும்.

ஆக்சிஜன்

மேலும் ஒரு நிமிடத்துக்கு 1000 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரும், நிமிடத்துக்கு 550 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் வசதியும் உள்ளன. அதேபோல் மாத்திரை மருந்துகளும் தேவையான அளவு இருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்