அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.;
கள்ளக்குறிச்சி
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அனைத்து தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் 2 நாட்கள் கொரோனா பாதுகாப்பு தடுப்பு ஒத்திகை நடத்த அறிவுறுத்தியது.
அதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது.
ஒத்திகை
இதற்காக கொரோனா நோயாளி போல் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரை பாதுகாப்பு கவச உடை அணிந்த டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்தார். அதாவது, அவருக்கு நோயின் தன்மை எப்படி உள்ளது? அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கலாமா? அல்லது ஆஸ்பத்திரி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாமா? ஆக்சிஜன் படுக்கையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாமா? என்று பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரை வீல் நாற்காலியில் வைத்து செவிலியர்கள் தள்ளிக்கொண்டு அவசர சிகிக்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிப்பது போல் ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஆக்சிஜன் படுக்கைகள் தயார்
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், துணை முதல்வர் சங்கீதா, பொது மருத்துவ துறை தலைவர் சுப்பிரமணியன், துறை தலைவர் டாக்டர் புகழேந்தி, உதவி நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இங்கு 80 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
இதேபோல் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வானூர், மரக்காணம், வளவனூர் மற்றும் விக்கிரவாண்டியில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோய் தடுப்பு ஒத்திகை நடந்தது. இந்த 7 அரசு மருத்துவமனைகளிலும் 175 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களை முழு உடல் பாதுகாப்பு கவச உடை அணிந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் வார்டுக்குள் அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது, ஆக்சிஜன் வசதி செய்து கொடுப்பது போன்ற ஒத்திகை நடைபெற்றது. இதில் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் நேரு, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் அனுபாமா, உதவி மருத்துவ அலுவலர் பழமலை, மருத்துவர் பொன்னரசு மற்றும் உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.