மக்காச்சோளப்பயிரை தாக்கும் படைப்புழுக்கள்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்காச்சோளப் பயிரை படைப்புழுக்கள் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Update: 2022-10-06 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மக்காச்சோளம்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். பயிர் செடிகள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் படைப்புழுக்கள் அதிக அளவில் தாக்கி வருவதால் செடிகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மக்காச்சோள பயிரின் சோகைகள் அனைத்தையும் புழுக்கள் தின்று விடுவதால் வளர்ச்சி இன்றி காணப்படுகிறது.

கதிர்கள் வர தாமதம்

இதனால் கதிர்கள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக ஈருடையாம்பட்டு, சவேரியார் பாளையம், மைக்கேல்புரம், பொரசப்பட்டு, சுத்தமலை, ஆற்கவாடி பகுதிகளில் அதிகளவில் மக்காச்சோளம் பயிர்களை படைப்புழு தாக்கி வருவதால் கவலை அடைந்து வரும் விவசாயிகள் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களை அதிகளவில் படைப்புழு தாக்கி வருகிறது. இதனால் செடிகள் முற்றிலும் வளர்ச்சி குறைந்து காணப்படுவதோடு, கதிர்களும் வராமல் உள்ளது. பல்வேறு மருந்துகளை வாங்கி தெளித்தும் இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்