சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த காண்டிராக்டர் கைது
மருமகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,
மருமகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.
வேலை வாங்கி தருவதாக...
நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி, முகிலன்விளையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது62), ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு பார்வதிபுரம் ஜே.கே.நகரை சேர்ந்த காண்டிராக்டர் ஜெயக்குமார் (45) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
ஜெயக்குமாரும், அவருடைய மனைவி சுனிதாவும் (37) நாராயண பெருமாளிடம் அவருடைய மருமகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர்.
அதாவது லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர் பணி கிடைக்கும் என்றுள்ளனர். இதை நம்பிய நாராயண பெருமாள், ஜெயக்குமாரின் மனைவி சுனிதா வங்கி கணக்கில் முதலில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் ரூ.5 லட்சத்தை ரொக்கமாக கொடுத்துள்ளார்.
மோசடி
பணத்தை வாங்கிய பிறகு அவர்கள் கூறியபடி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் நாராயண பெருமாள் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அப்போது ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு ஏமாற்றியதாக தெரிகிறது. மேலும் தொடர்ந்து பணத்தை கேட்ட போது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து நாராயண பெருமாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் கொடுத்தார். அவர் இதுகுறித்து விசாரிக்க கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாவுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் காண்டிராக்டர் ஜெயக்குமார், அவருடைய மனைவி சுனிதா மீது மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.
கைது
இந்தநிைலயில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி பகுதியில் காண்டிராக்டர் ஜெயக்குமார் பதுங்கி இருப்பதாக சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி மற்றும் போலீசார் ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயக்குமாரை கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் மீது சென்னை ஆவடி போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணம் மோசடி, காசோலை மோசடி உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.