மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி- உறவினர்கள் சாலை மறியல்

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியானார். அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-29 19:07 GMT

அரக்கோணம்

அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியானார். அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி பலி

அரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 46). இவரது மனைவி மாலா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். ஜேக்கப் தமிழ்நாடு மின்சார வாரியம் அரக்கோணம் கிழக்கு பிரிவு அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் அரக்கோணம் அடுத்த வீரநாராயண கண்டிகை பகுதியில் உள்ள மின்கம்பத்தில் புதிய மின் கம்பிகளை இணைக்கும் பணியில் ஜேக்கப் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி ஜேக்கப் பலியானதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலூகா போலீசார் பலியான ஜேக்கப் உலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ஜேக்கப்பின் மனைவி மற்றும் உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இறந்த ஜேக்கப்பின் மனைவி மாலாவிற்கு அரசு வேலை, நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார், போலீசார் மற்றும் மின் வாரிய அலுவலர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அரசுக்கு பரிந்துரை செய்து நிவாரணமாக ரூ.5 லட்சமும், மனைவிக்கு அரசு வேலையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்