தொடர் மழை எதிரொலி: கோத்தகிரியில் கேரட் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்

தொடர் மழை எதிரொலியால், கோத்தகிரியில் கேரட் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-08-13 18:45 GMT

கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதில் கேரட்டிற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலை கிடைத்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் தங்களது தோட்டங்களில் கேரட்டை பயிரிட்டனர். கேரட் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.

இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக நன்கு விளைந்த கேரட்டுகள் அழுகிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நஷ்டம் ஏற்படாமல் தடுக்க விளைந்த கேரட்டை அறுவடை செய்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.50 முதல் 65 வரை தரத்திற்கு தக்கவாறு கேரட் கொள்முதல் செய்யப்படுகிறது. சிறிய அளவிலான கேரட் கூட கிலோ 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதல் விலை போதுமானதாக இருப்பதால் கேரட் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்