இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு
இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.;
ராமநாதபுரம்,
இலங்கையில் இருந்து படகு மூலமாக கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை உதவியுடன் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு ரோந்து சென்றனர்.
இந்த ரோந்து படகை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளுடன் வேகமாக தப்பி செல்ல முயன்றனர். இதை பார்த்த அதிகாரிகள் அவர்களை விரட்டி சென்றனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடலில் வீசினர். பின்னர் அந்த படகில் ஏறிய அதிகாரிகள் அதில் இருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அதில் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகளை, ரோந்து படகை கண்டதும் பயந்து கடலில் வீசியதாக தெரிவித்துள்ளனர்.
எனவே நேற்று அதிகாலை முதலே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் வேதாளை மற்றும் மண்டபத்திற்கு இடைப்பட்ட முயல் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் பார்சலை கைப்பற்றினார்கள். அதில் சுமார் 6 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகளை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர்.
மொத்தம் 6 கிலோ தங்கக்கட்டிகள் மட்டும் தானா? அல்லது வேறு தங்கக்கட்டி பார்சல்கள் இன்னும் கடலுக்குள் கிடக்கிறதா? வேறு எங்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கோணங்களில் கைதான 3 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் பல கோடி ரூபாய் மதிப்பிருக்கும் என்று கூறப்படுகிறது. கடத்தல்காரர்கள் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வருவது, அதிகாரிகளை பார்த்ததும் கடலில் வீசுவது போன்ற சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.