மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு; வாலிபர் கைது
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உடைய வாலிபரை விருதுநகர் அருகே போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவர் கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேசிய குற்றப்புலனாய்பு பிரிவு போலீசார் அவரை தேடி வந்தனர். விசாரணையில் அவர் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி மதுரை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் கீழராஜகுலராமன் பகுதியில் பதுங்கியிருந்த அய்யப்பனை கைது செய்து விசாரணைக்கு மதுரைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதுடன், அய்யப்பனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சேகரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.