சேவை குறைபாட்டுக்காக வக்கீலுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க அஞ்சல்துறைக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

சேவை குறைபாட்டுக்காக வக்கீலுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருச்சி அஞ்சல்துறைக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-07-13 20:17 GMT

தபாலில் அனுமதி கடிதம்

திருச்சி பீமநகர் நியூராஜாகாலனியை சேர்ந்தவர் வக்கீல் ஹரிபாஸ்கர். இவருடைய மகள் கனிஸ்கா. கடந்த 2015-ம் ஆண்டு திருச்சி பாரதியார் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தனது மகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பினார். இதற்காக அவர் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 மற்றும் ரூ.10-க்கு அஞ்சல் தலை ஒட்டியிருந்தார்.

அதை பரிசீலனை செய்த பள்ளி நிர்வாகம் 27-4-2015 அன்று கனிஸ்காவை பள்ளியில் சேர்ப்பதற்கான அனுமதி கடிதத்தை தபாலில் அனுப்பினர். அந்த தபாலை 22-5-2015 அன்றுதான் தபால்காரர் அவருக்கு பட்டுவாடா செய்துள்ளார். தபாலை பிரித்து பார்த்த போது, 4-5-2015 மற்றும் 5-5-2015 ஆகிய நாட்களுக்குள் பள்ளி கட்டணத்தை செலுத்தி, உங்கள் மகளுக்கு அனுமதியை உறுதி செய்து கொள்ளுங்கள். தவறும்பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளிக்கு சென்று விசாரித்தார். அப்போது, பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாகவும், நாங்கள் அனுப்பிய தபால் உங்களுக்கு தாமதமாக கிடைத்ததற்கு அஞ்சல்துறையினர் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக கனிஸ்காவை அந்த பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், தான் செலுத்திய விண்ணப்ப கட்டணம் ரூ.100, அஞ்சல்தலைக்கு ரூ.10, இழப்பீடாக ரூ.95 ஆயிரம் மற்றும் வழக்கு செலவை பெற்று தரக்கோரி திருச்சி அஞ்சல் கண்காணிப்பாளர், அஞ்சல் அதிகாரி, பீமநகர் பிரிவு தபால்காரர் ஆகியோர் மீது திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் காந்தி, உறுப்பினர்கள் செந்தில்குமார், சாயீஸ்வரி ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர். அதில் சேவை குறைபாட்டுக்காக ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுடன், ஹரிபாஸ்கர் பள்ளிக்கு செலுத்திய ரூ.100 கட்டணம், அஞ்சல்தலைக்கு ரூ.10 என ரூ.10,110 மற்றும் வழக்கு செலவை ஒரு மாதத்துக்குள் எதிர்மனுதாரர்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்