வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக 4 மாவட்ட விவசாயிகளுடன் கருத்துகேட்பு கூட்டம் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பெரியகருப்பன் பங்கேற்பு
வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக 4 மாவட்ட விவசாயிகளுடன் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்றனா்
சிவகங்கை,
தமிழக நிதி நிலை அறிக்கையின் போது வேளாண்துறை தொடர்பாக தனிபட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், கருத்துகேட்பு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:- முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைக்கான தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியதின் அடிப்படையில் தமிழகத்தில் சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டல வாரியாக, கருத்து கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தின் வாயிலாக, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்படவுள்ளன. கூட்டத்தின் வாயிலாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கருத்துக்கள் பெறப்படுவது மட்டுமன்றி, உழவர் செயலி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் இதுவரை 2,253 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.
கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:- முதல்-அமைச்சா் கடந்த 20 மாதங்களாக தமிழகத்தில் நல்லாட்சியினை வழங்கி, அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக வேளாண் துறைக்கென்று தனி நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்ய முதல்முறையாக, கருத்து கேட்பு கூட்டம் விவசாயிகளிடம் மண்டல வாரியாக நடத்துவதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தற்போது விவசாய சங்க பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து கருத்து கேட்கப்படுகிறது என்றார்.
இக்கூட்டத்தில் சர்க்கரைத்துறை முதன்மை செயலாளர், ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண்மை உற்பத்தி துறை ஆணையர், அரசு செயலர் சமயமூர்த்தி, வேளாண்மை, உழவர் நலத்துறை இயக்குனர், அண்ணாதுரை, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் மணிவண்ணன், செந்தில்குமாரி, டாமின் இயக்குனர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன், சிவகங்கை நகா் மன்றத்தலைவா் துரைஆனந்த், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த வேளாண்மை இணை இயக்குனர்கள், தோட்டக்கலை துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.