என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
சிதம்பரம்,
கருத்துகேட்பு கூட்டம்
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் (சுரங்கம்) சுரேஷ் சந்திர சுமந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏக்கருக்கு ரூ.25 லட்சம்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து பேசியதாவது:-
நில உரிமையாளர்கள் உயர்த்தப்பட்ட நில இழப்பீட்டுத் தொகை திருப்திகரமாக உள்ளது என்றும் வேலை வாய்ப்புகள் சொசைட்டி வாயிலாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். அதன்அடிப்படையில் சொசைட்டி மூலமாக என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் அளித்த தகுதியுடைய உரிமையாளர்களுக்கு வேலை வழங்கப்படும். மேலும் என்.எல்.சி. நிர்வாகம் ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒத்துக் கொண்டுள்ளனர். 2 கிராம மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு ரூ.17 லட்சம் கொடுத்துள்ளனர்.
வேலைவாய்ப்பில் ஆயிரம் பேருக்கும், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த 560 பேருக்கும் வேலை வழங்கி 3 ஆண்டுகாலம் பயிற்சி கொடுத்து மாத சம்பளத்தில் வேலை நிரந்தரம் செய்யப்படும் என்றார். இதனை ஏற்ற கரிவெட்டி, கத்தாழை கிராமத்தின் நில உரிமையாளர்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் எடுப்பதற்கு தங்களின் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.
பணி நியமன ஆணை
மேலும் இக்கூட்டத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு என்.எல்.சி. நிறுவன பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இதில் என்.எல்.சி. மனிதவளத்துறை இயக்குனர் சதீஷ் பாபு, நில எடுப்பு துறை செயல் இயக்குனா் ஜாஸ்பர் ரோஸ், முதன்மை பொதுமேலாளர் விவேகானந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துமாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.