தென்னிந்தியாவின் வர்த்தக உறவுகளை மேம்படுத்த சென்னையில் துணை தூதரகம்-வங்காளதேச துணைத்தூதர் தகவல்
தென்னிந்தியாவின் வர்த்தக உறவுகளை மேம்படுத்த சென்னையில் துணை தூதரகம் தொடங்கப்பட்டு உள்ளது என்று வங்காளதேச துணை தூதரகத்தின் துணைத்தூதர் தெரிவித்து உள்ளார்.
மதுரை,
தென்னிந்தியாவின் வர்த்தக உறவுகளை மேம்படுத்த சென்னையில் துணை தூதரகம் தொடங்கப்பட்டு உள்ளது என்று வங்காளதேச துணை தூதரகத்தின் துணைத்தூதர் தெரிவித்து உள்ளார்.
கருத்தரங்கம்
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், இந்தியா-வங்காளதேசம் வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். சென்னையில் உள்ள வங்காளதேசம் துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் செல்லி சாலிஹீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் வங்காளதேசத்துக்கு 12 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.18.2 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவில் இருந்து 5,443 பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து 910 பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆர்.எம்.ஜீ.பைபர், கையால் நெய்யப்படும் பைபர், வாசனை பொருட்கள் ஆகியன இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து பெட்ரோலியம், பருத்தி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
துணை தூதரகம்
தென்னிந்தியாவில் உள்ள வேளாண் விளை பொருட்கள் மற்றும் மருத்துவ சுற்றுலாவுக்காக கடந்த 2021-ல் சென்னையில் துணைத்தூதரகம் தொடங்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் புதுச்சேரி, டாமன், டையூ உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் உள்ளன. கொரோனாவுக்கு முன்பு வங்காளதேசம் செல்ல 2.5 மில்லியன் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை பலமுறை சென்றுவரும் மல்டிபிள் என்ட்டி விசாவாகும். மதுரை வரலாற்று சிறப்பு மிக்க நகரமாக இருப்பதால், அங்குள்ள இந்து சகோதரர்கள் மதுரைக்கு சுற்றுலா வருவதை விரும்புகின்றனர். இங்கிருந்து சமையல் எண்ணெய், அரிசி, வெங்காயம், சீனி உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் பழைய சிட்டகாங் துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக பல்வேறு துறைமுகங்கள் மூலம் தங்களது சரக்குகளை விரைவாக அனுப்பலாம். மேற்கு வங்கமாநிலம் நியூஜல்பைகுரியில் இருந்து குமிலாவுக்கு நேரடி சரக்கு ரெயில் சேவை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.