பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு குவிந்த கட்டுமான தொழிலாளர்கள்
திண்டுக்கல்லில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு கட்டுமான தொழிலாளர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குவிந்த தொழிலாளர்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு நலவாரியம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வந்துள்ளன. மேலும் நேற்று முதல் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதுமட்டுமின்றி நெரிசலை தவிர்க்கும் வகையில், தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை அறிந்த தொழிலாளர்கள் நேற்று காலை முதலே அலுவலகத்துக்கு வரத்தொடங்கினர்.
ஒருகட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் வரை குவிந்தனர். மேலும் உபகரணங்கள் வாங்குவதற்கு தொழிலாளர்கள் முண்டியடிக்க தொடங்கினர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.
தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்
இதற்கிடையே சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், கட்டுமான தொழிலாளர் சங்க துணை தலைவர் ராஜூ, துணை செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்து பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும்படி வலியுறுத்தினர்.
ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், தாலுகா வாரியாக பிரித்து தினமும் குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.