கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-15 17:06 GMT

தக்கலை:

தக்கலை அருகே கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

குளச்சல் அருகே உள்ள களிமார் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 53), கட்டிட தொழிலாளி. இவருக்கு சாந்தி(36) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சதாசிவம் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். பின்னர், அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவர் குளச்சலில் இருந்து தக்கலை அமலாகான்வென்ட் பகுதிக்கு வந்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஆனாலும், கடன் கொடுத்தவர்கள் தக்கலையில் இருப்பதை அறிந்து அங்கு வந்தும் பணத்ைத கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சதாசிவத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தினமும் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வந்த சதாசிவம் தூங்கச் சென்றார். நேற்று அதிகாலையில் அவரது மனைவி சாந்தி எழுந்து பார்த்தார். அப்போது, சதாசிவத்தின் அருகில் விஷ பாட்டில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரை எழுப்பியபோது அவர் இறந்தது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து சாந்தி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சதாசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்