32 ஏக்கரில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி

ஸ்டெர்லைட் சார்பில் 32 ஏக்கரில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-05-30 19:00 GMT

சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 'முத்துநகர் பல்லுயிர் பூங்கா' என்ற பெயரில் பல்லுயிர் பூங்கா ஒன்றை அமைக்க ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இதற்கான தொடக்க விழா ஸ்டெர்லைட் அனல்மின் நிலைய பகுதியில் நடந்தது. தமிழகத்தின் காடு மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு பணிகளை தொடங்கி வைத்தார். தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால சுப்பிரமணியன், சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த ஊர் பெரியவர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி கலந்து கொண்டு பேசுகையில், 'இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப்பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழகத்தில் முதன் முறையாக ஐந்திணை பூங்கா நிறுவப்பட உள்ளது.

புவி வெப்பமயமாதலை தடுக்கும் 'டை-மெத்தில்-சல்பைடு' என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை அதிகளவில் நடுவதற்கு முடிவு செய்து உள்ளோம். தொடர்ந்து மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கால்வாய்களை புனரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் சேவை செய்து வருகிறது. 10 லட்சம் மரங்களை நடும் வகையில் 'பசுமை தூத்துக்குடி' என்ற திட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 1.25 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். சுமார் 4000 ஏக்கர் நிலத்தில் மரங்களை நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வளர்ச்சி அடையும்' என்றார்.

நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள், கிராம மக்கள், ஸ்டெர்லைட் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்