ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்
கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் ரூ.784 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 351 புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை காட்பாடியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 104 பள்ளி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 1,310 சதுரடியில் 2 வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமானப்பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஈஸ்வரன், ஆர்.டி.ஓ. பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.