தேவர்சோலையில் ரூ.3 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி-விரைவில் முடிவடையும் என அதிகாரி தகவல்

தேவர்சோலையில் ரூ.3 கோடி செலவில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவடையும் என அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-05-31 14:28 GMT

கூடலூர்

தேவர்சோலையில் ரூ.3 கோடி செலவில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவடையும் என அதிகாரி தெரிவித்தார்.

இடவசதி இல்லாமல் அவதி

கூடலூரில் இருந்து தேவர்சோலை, பிதிர்காடு, பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. கர்நாடகா தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது. இதனால் போக்குவரத்து வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகிறது. இதேபோல் கூடலூர் தாலுகா பகுதி மக்கள் மருத்துவர் சிகிச்சை பெறுவதற்காகவும், பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக கூடலூரில் இருந்து வயநாட்டுக்கு சென்று திரும்புகின்றனர். இதன் காரணமாக 2 மாநில பஸ்களும் இயக்கப்படுகிறது. இதனால் தினமும் ஏராளமானவர்கள் கேரளாவில் இருந்து கூடலூருக்கு வந்து செல்கின்றனர். இதில் தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கேரளா மற்றும் கூடலூரில் இருந்து வரும் பஸ்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்துவந்தது.

பஸ் நிலைய கட்டுமான பணி

இதனால் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி கடந்த 2018- 19- ம் ஆண்டில் மூலதன மானியத்திட்டத்தின் கீழ் தேவர்சோலை பஜாரில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி செலவில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் உள்பட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை சீராகி உள்ளது. இதேபோல் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்துக்குள் 23 கடைகள் கட்டும் பணியும் முடிவடைந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) நடராஜ் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் தரைத்தளம் அமைக்கும் பணி மட்டுமே நடைபெற உள்ளது. எனவே கட்டுமான பணி இன்னும் 1 மாதத்தில் முழுமையாக நிறைவுபெற்று விடும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்