நீரை பாதுகாப்பது அவசியம்:பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்காதது ஏன்?- தமிழக அரசு அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோா்ட்டு உத்தரவிட்டது.
பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோா்ட்டு உத்தரவிட்டது.
ஆழ்துளை கிணறு
திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "திருச்சி மாவட்டத்தில் அன்பில் மற்றும் அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளன. இதற்கான நீராதாரம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கிடைக்கிறது. கொள்ளிடம் ஆறு மத்திய மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக உள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 15 ஆண்டு காலம் மிக மோசமான அளவில் மணல் கொள்ளை நடந்ததன் காரணமாக 90 சதவீதம் கொள்ளிடம் ஆறு அழிந்துவிட்டது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கீழஅன்பில் ஆற்றுப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை தாக்கல்
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதிகள், தண்ணீர் என்பது வருங்கால சந்ததியினருக்கு பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாய தேவைக்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் நீரை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்காது ஏன்?. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.