கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி
கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எந்த வகையிலும் பாதிக்காது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். இதுதொடர்பாக கோவையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாரதீய ஜனதா ஏற்றுக் கொள்கிறது. அங்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை கட்சி தலைமை ஆராயும். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது. மேலும் மக்களிடம் இன்னும் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள இது உதவும்.
இந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேறுமாதிரியான கனவு கொண்டு இருக்கிறார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். தமிழகத்தில் தி.மு.க.வை மக்கள் பலமுறை புறக்கணித்து இருக்கிறார்கள்.
கர்நாடகாவில் தற்போது மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளனர். ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பட்டியல் இன மக்களின் பிரச்சினைக்கு திருமாவளவன், தான் இருக்கும் கூட்டணியில் தீர்வு காண முடியவில்லை. எனவே அவர் அந்த கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜனதா கூட்டணிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.