காங்கிரஸ் கட்சியினர் அறவழிப்போராட்டம்

சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-26 18:20 GMT

சிதம்பரம்:

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் பண மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோனியா காந்தியிடம் டெல்லியில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை முன்பு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழிப்போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மாநில துணைத்தலைவருமான கே.ஐ.மணிரத்தினம், மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.வி.பழனிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி. செந்தில்நாதன் வரவேற்றார். நகரமன்ற உறுப்பினரும், நகர தலைவருமான தில்லை.ஆர்.மக்கின், மாவட்ட துணை தலைவர் ஜெமினி எம்.என். ராதா, வட்டார தலைவர்கள் சம்பந்த மூர்த்தி, சுந்தர்ராஜன், செழியன், தமிழ்நாடு காங்கிரஸ் ஆர்.டி.ஐ. துறை மாநில பொதுச்செயலாளர் ஸ்டீபன் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேட்டி

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சோனியா காந்தியை 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்திருப்பது தவறு. சோனியா காந்தி என்ன தவறு செய்தார். நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை காங்கிரஸ் கட்சியால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பத்திரிகை சொத்துகள் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பெயரில் தான் உள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தில் பணப்பரிமாற்றம் கிடையாது. பணப்பரிமாற்றம் செய்து, முறைகேடு நடந்தால் விசாரணை செய்யலாம்.

பணப்பரிமாற்றமே இல்லாமல் நிறுவனத்தில் விசாரணை என்ற பெயரில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை விசாரிப்பது, இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.

அரிசி, பால், தயிர் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு வரி விதித்துள்ளது. ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது 5 சதவீதம் வரி விதித்திருப்பது, இதை விட கொடுமையான செயல் எதுவும் இல்லை. இது கண்டிக்கத்தக்கது. மோடியை எதிர்ப்போம், அவர்களுடைய சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்