காங். தலைவர் மரணம் குறித்து கட்சி ரீதியாகவும் விசாரணை - செல்வப்பெருந்தகை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்து கொண்டவர் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Update: 2024-05-04 08:11 GMT

சென்னை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.பி ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ்  தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்து கொண்டவர். ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.

நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன்.காவல் துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்சி ரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று கூறினார். இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை விரைகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்