இருதரப்பினர் இடையே மோதல்; 9 பேர் கைது

ஜீயபுரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே முக்கிய நபரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2023-01-04 19:09 GMT

ஜீயபுரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே முக்கிய நபரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மோதல்

திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள குழுமணி கிராமத்தில் புத்தாண்டு அன்று இரவில் கேக் வெட்டும்போது, இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மறுநாள் இரவு சுக்கான் குழி பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு சிலர் சத்தம் போட்டு கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி காத்தான் மற்றும் சிலர் வீட்டில் இருந்து வெளியே வந்து என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளனர். அப்போது, சிலர் கற்கள் மற்றும் கட்டையால் அவர்களை தாக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்ேடா கண்ணாடியையும் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

சாலை மறியல்

இதில் காத்தான், கருப்பன், ராஜலிங்கம், விஜயலட்சுமி, பாப்பாத்தி, அருண் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த மோதலில் மற்றொரு தரப்பை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் சுக்கான்குழி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் ஈடுபட்ட முக்கிய நபரை கைது செய்யக்கோரி உறையூர் குழுமணி சாலையில் கோப்பு பாலத்தின் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உரிய விசாரணை நடத்தி முக்கிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

9 பேர் கைது

இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் 2 தரப்பினரை சேர்ந்த மேல குழுமணிபகுதியைச் சேர்ந்த திவாகர் (வயது 25), ராமர் (28), ஷாருக்கான் (25), அருண் குமார் (26), மணிவேல் (24), தியாகராஜன் (30), நரசிம்மன் (25), சசிகுமார் (19), ஆகாஷ் (20) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்