வேனில் கடத்த முயன்ற 878 கிலோ குட்கா பறிமுதல்
ஓசூர் வழியாக தூத்துக்குடிக்கு வேனில் கடத்த முயன்ற 878 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திகிரி:
ஓசூர் வழியாக தூத்துக்குடிக்கு வேனில் கடத்த முயன்ற 878 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக குட்கா கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார் மத்திகிரி அருகே கொத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா, குட்கா உள்ளிட்டவை மொத்தம் 878 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேனுடன் வந்த காரையும் போலீசார் நிறுத்தினர். இதுதொடர்பாக போலீசார் வேன், கார் டிரைவர் ஆகியோரிடம் விசாரணைநடத்தினர்.
3 பேர் கைது
அப்போது பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு குட்கா கடத்த முயன்றது தெரிந்தது. வரும் வழியில் எங்காவது போலீசார் நிற்கிறார்களா? என பார்த்து டிரைவருக்கு தகவல் தெரிவிக்க காரில் பின்ெதாடர்ந்து வந்ததும் தெரிய வந்தது.
வேன் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் கிராமத்தை சேர்ந்த ஜான் ஜெகதீஷ் (வயது37), வேன் உரிமையாளர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அம்பால் நகரை சேர்ந்த பெரிய பால்ராஜ் (32), கார் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் விருசம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதம்பி (28) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் டிரைவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.5 லட்சத்து 29 ஆயிரத்து 760 மதிப்புள்ள குட்கா, சரக்கு வேன், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்செய்தனர்.