கேரளாவை சேர்ந்த 2 பேரை கொலை செய்தோம்

பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பேரை கொலை செய்தோம் என்று கோர்ட்டில் சரணடைந்த 4 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2022-07-26 17:28 GMT

நல்லம்பள்ளி:

பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பேரை கொலை செய்தோம் என்று கோர்ட்டில் சரணடைந்த 4 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம அளித்துள்ளனர்.

2 பேர் கொலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி பெரியகரடு வனப்பகுதியில் கல்குவாரி அருகே கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்பாய் (வயது47), திருவனந்தபுரம் வெள்ளாத்துக்காடு பகுதியை சேர்ந்த நிவீல்குருஸ் (58) ஆகிய 2 பேரும் கடந்த 19-ந் தேதி கொலை செய்யப்ப்டு பிணமாக கிடந்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக, சேலத்தை சேர்ந்த ஜோசப் (26), சுரேன்பாபு (25) விஷ்ணுவர்மன் (27), ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ரகு (42) ஆகிய 4 பேர் கடந்த 22-ந் தேதி தென்காசி மாவட்டம் செங்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (40), லட்சுமணன் (எ) அபு (37) ஆகிய 2 பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து கோர்ட்டில் சரணடைந்த 4 பேரையும் போலீசார் நேற்று காவலில் எடுத்து தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனா். அதன்விவரம் வருமாறு:-

கொலையான 2 பேரும் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார், இளங்கோ, கார்த்தி ஆகியோருக்கு இரிடியம் வாங்கியது தொடர்பாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களை தீர்த்துக்கட்ட 3 பேரும் முடிவு செய்தனர். இதையடுத்து நிவீல்குருஸ், சிவக்குமார்பாய் ஆகிய 2 பேரையும் நைசாக பேசி அவர்கள் சேலத்திற்கு வரவழைத்துள்ளனர்.

3 பேருக்கு வலைவீச்சு

பின்னர் அவர்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு காரில் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். பின்னர் 2 பேரின் உடல்களை காரில் கொண்டு சென்று நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான நந்தகுமார், இளங்கோ, கார்த்தி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்