பங்காரு அடிகளார் மறைவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இரங்கல்

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-20 02:39 GMT

சென்னை,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர்.

முன்னதாக உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் தற்போது குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டவரும், மரியாதைக்குரிய சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

திரளாக பெண்கள் மேல்மருவத்தூர் சென்று வழிபட காரணமாக அனைத்து நாட்களிலும் பெண்களுக்கு கோவிலில் அனுமதியளித்து, ஆன்மீக புரட்சி செய்தவர். இந்திய அளவில் ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர். அவரது இழப்பு ஆன்மீகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்லூரி மற்றும் கலாசார அறக்கட்டளையைச் சார்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறை தொண்டில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து பிரியாவிடை கண்ட அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன், என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்,

Tags:    

மேலும் செய்திகள்