கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பளிபட்டியை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மகன் வாசுதேவன் (வயது 19). மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் துறை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வாசுதேவன் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அவருடன், அவரது நண்பர் பாலகண்ணனும் உடன் வந்தார். மதுரை-திருச்சி சாலையில் கோட்டைபட்டி விலக்கு அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் இவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வாசுதேவன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பிரேம்குமார் (25), வீரா (19), தனுஷ் (20), சுதர்சன் (20), சரவணபுகழ் (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தற்போது வீரா, தனுஷ், சுதர்சன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டையில் தங்கி உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதித்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரர்கள் நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் இவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.