சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து நடந்த சாலை போக்குவரத்து நிறுவனங்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் நடந்த சாலை போக்குவரத்து நிறுவனங்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் பார்சல்கள் அனுப்பப்படுகிறது.
சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் நடந்த சாலை போக்குவரத்து நிறுவனங்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் பார்சல்கள் அனுப்பப்படுகிறது.
வேலை நிறுத்த போராட்டம்
ஈரோட்டில் இருந்து மஞ்சள், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் லாரி புக்கிங் அலுவலகங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சாலை போக்குவரத்து நிறுவனங்கள் ஈரோடு பவானிரோடு, பார்க்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 17-ந் தேதி ஈரோடு பவானிரோட்டில் உள்ள ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. இதை கண்டித்து சுமை தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க செயலாளர் பிங்கலன் என்பவர் தொழிலாளர்களால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த 18-ந் தேதி முதல் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது.
தேக்கம்
இந்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஏற்கனவே 2 நாட்களாக நடந்த போராட்டத்தினால் சுமார் ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய பார்சல்கள் தேக்கம் அடைந்து உள்ளது. ஈரோட்டில் இருந்து மஞ்சள், எண்ணெய், ஜவுளி ஆகிய பொருட்கள் அதிகஅளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்து கிடக்கிறது.
இந்தநிலையில் போராட்டம் தொடர்பாக ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று மாலை ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
வாபஸ்
இதுகுறித்து ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் கலைமணி கூறியதாவது:-
சுமை தூக்கும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் எங்கள் சங்க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். நிர்வாகியை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் போலீஸ் தரப்பில் இதுவரை முறையான எந்தவொரு விளக்கமும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. இருந்தாலும், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்து உள்ளனர். மேலும், மருந்து, ரசாயனம், உணவு வகைகள் உள்ளிட்ட பொருட்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி எங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்து உள்ளோம். நாளை (அதாவது இன்று) முதல் வழக்கம்போல் பார்சல்கள் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்