உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து - வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை

உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-02-21 09:55 GMT

உர உரிமம் ரத்து செய்யப்படும்

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது ராபி பருவ சாகுபடி முழு வீச்சில் நடந்து வருகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விற்பனை உரிமம் இன்றியோ, அதிக விலைக்கோ மற்றும் விவசாயிகள் கேட்கும் உரத்தை இணைப்பு பொருட்களுடன் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.

தகவல் பலகை

அனைத்து விற்பனை நிலையங்களிலும் உரங்களை விவசாயிகளின் ஆதார் எண் பெற்று விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை நிலையங்களில் உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும்படி தவறாமல் பராமரிக்க வேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் பரப்புக்கு ஏற்ற உரப்பரிந்துரையின்படி விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயத்திற்கு தேவையான உரங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்தல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கூடுதல் விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், ஒரே நாளில் பட்டியலிட்டு அதிகபடியான உரங்கள் விற்பனை செய்தல், மானிய விலை உரங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாட்க்கு விற்பனை செய்தல், உர உரிமத்தில் ஒப்புதல் அளிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தல், போன்ற தவறான நிகழ்வுகள் உரக்கடைகள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புகார்களை தெரிவிக்கலாம்

விற்பனை உரிமம் பெறாமலும், காலாவதியான பொருட்கள் கண்டறியப்பட்டாலும், ஆய்வின் போது உரங்கள் இருப்பு, பிஓஎஸ் கருவியின்படி உரங்கள் இருப்பு, இருப்பு பதிவேட்டின்படி உரங்கள் இருப்பு, ஆகியவற்றில் மாறுபாடுகள் கண்டறியப்பட்டாலும் உர விற்பனைக்கு தடை விதிக்கப்படும். விற்பனை தடை செய்யப்படும் நிலையில் ஒருங்கிணைந்த உர விற்பனை கண்காணிப்பு ஐ.எப்.எம்.எஸ் முறையின் பயனர் எண் (ஐடி) முடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

உரிய காரணமின்றி யூரியா உரத்தினை அளவுக்கு அதிகமாக விற்பனை செய்வோர் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படியும், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை மீறுபவர்கள் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

மேலும் இதுகுறித்த புகார்களை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்