செல்லப்பிராணிகள் வளர்க்க கட்டாய உரிமம்; சென்னை மாநகராட்சியில் குவியும் விண்ணப்பங்கள்
செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்காக கடந்த 10 மாதங்களில் இதுவரை 272 பேர் மட்டுமே உரிமம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.;
சென்னை,
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை ராட்வீலர் இனத்தை சேர்ந்த இரு நாய்கள் கடித்தன. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அந்த நாய்களை வளர்ப்பதற்கான உரிமத்தை புகழேந்தி வாங்கவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, "நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும். அவற்றுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்திருந்தார். இதனால், நாய்கள் உள்பட செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு, உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் குவிய தொடங்கின.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் இதுவரை 272 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் உரிமம் பெற்ற நிலையில், உரிமம் பெறுவது கட்டாயம் என்று மாநகராட்சி எச்சரித்ததை அடுத்து செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.