பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது

பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-03-26 06:50 IST
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது

திருப்பூர்,

தமிழ்நாட்டில் நேற்று பிளஸ்-2 வகுப்பிற்கான கடைசி தேர்வு நடைபெற்றது. திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அதே பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளும், தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் தேர்வு எழுதினார்கள்.

ஒரு வகுப்பறையில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகள் மற்றும் 5 மாணவர்கள் என மொத்தம் 11 பேர் தேர்வு எழுதினர். அந்த வகுப்பறையில் தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமார் என்பவர், 6 மாணவிகள் பிட் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வது போல் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

ஆனாலும் தேர்வை கருத்தில் கொண்டு மாணவிகள் தொடர்ந்து தேர்வு எழுதி உள்ளனர். இந்த நிலையில் நேற்று தேர்வு நேரம் முடிந்தவுடன் வகுப்பறையில் இருந்து அவசரம், அவசரமாக வெளியே வந்த மாணவிகள், தங்களது பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரிடம் ஆசிரியரின் பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் தெரிவித்து கதறி அழுதனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தேர்வு தொடங்கியதில் இருந்தே ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பத்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில், ஆசிரியர் சம்பத்குமார், அம்மாபாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருவதும், அவருக்கு திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக ஆசிரியர் சம்பத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்