செயின் பறிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

சென்னையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-03-27 18:19 IST
செயின் பறிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் அடுத்தடுத்து 6 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்திருந்த 2 மர்ம நபர்கள் இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் தொடங்கி வேளச்சேரியில் தங்களுடைய சங்கிலி பறிப்பு திட்டத்தை முடித்துக்கொண்டு 2 கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

தப்பி சென்ற கொள்ளையர்களில் சென்னை விமான நிலையத்துக்குள் வைத்து ஒருவரும், விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த மற்றொரு கொள்ளையனும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்துக்குள் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 3-வது கொள்ளையன் ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் 'பினாகினி' எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பி செல்லும்போது, ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் ஜாபர் குளாம் உசேன் இரானி (வயது 35), விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் மேஷம் இரானி (28), ரெயிலில் பிடிபட்ட கொள்ளையன் பெயர் சல்மான் உசேன் இரானி (28) என்பதும், இரானிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்களில் முதலில் உள்ள இருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். ரெயிலில் பிடிபட்ட கொள்ளையன் கர்நாடக மாநிலம் விகார் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

விமான நிலையத்தில் கைதான கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை தரமணி ரெயில் நிலையம் அருகே நிறுத்திவைத்திருப்பதாக தெரிவித்தனர். அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதற்காக திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரி தலைமையில் தனிப்படை போலீசார் 2 கொள்ளையர்களையும் தரமணி அழைத்து சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையர்கள் 2 பேரும் அடையாளம் காட்டினார்கள்.

அப்போது கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர், மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து திடீரென்று எதிர்பாராத வகையில் போலீசாரை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். ஆனால் அந்த குண்டுகள் குறி தவறி வேறு திசையில் சென்று அருகில் நின்ற போலீஸ் ஜீப்பின் மீது பட்டு சிதறியது.

இன்ஸ்பெக்டர் புகாரி உள்ளிட்ட தனிப்படை போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் புகாரி கொள்ளையன் ஜாபரை எச்சரித்தார். ஆனால் அவர் தொடர்ந்து துப்பாக்கியை கையில் வைத்து சுடுவதை போன்று குறி பார்த்தார். இதனால் வேறு வழியின்றி தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் புகாரி தனது கைத்துப்பாக்கியால் கொள்ளையன் ஜாபரை நோக்கி சுட்டார்.

துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த தோட்டா கொள்ளையன் ஜாபரின் மார்பை துளைத்தது. அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அவரை காப்பற்றுவதற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை கோர்ட்டில் சல்மான் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக சங்கிலி பறித்த கொள்ளையர்கள் விமான நிலையத்தில் சிக்கியது குறித்து போலீஸ் கமிஷனர் அருண் கூறுகையில், "விமானத்தில் தப்பிக்க முயன்ற கொள்ளையர்கள் 2 பேரும் தங்களது உடைகளை மாற்றி வேறு உடை அணிந்திருந்தனர். ஆனால் அவர்கள் அணிந்திருந்த 'ஷூ'வை மாற்றவில்லை. மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையனின் 'ஷூ' எங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அதை வைத்து விமானத்தில் அமர்ந்திருந்த கொள்ளையனை அடையாளம் கண்டோம். இதற்குள் மும்பை செல்வதற்கு 'ஏர் இந்தியா' விமானத்தில் செல்ல டிக்கெட் எடுத்திருந்த இன்னொரு கொள்ளையனை விமான நிலைய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அந்த கொள்ளையன் அதிகாரிகளை ஒருவழியாக சமாளித்து, 'போர்டிங் பாஸ்' வாங்கி கொண்டு 'ஏர் இந்தியா' விமான பயணிகள் அமர்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார். அந்த கொள்ளையனையும் காலில் அணிந்திருந்த 'ஷூ'வை வைத்து அடையாளம் கண்டோம். 2 கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொள்ளையடித்த 27 பவுன் நகைகளையும் பங்கு போட்டு கொண்டனர். விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையன் தனது பங்குக்கு கிடைத்த தங்கச்சங்கிலியை கழுத்தில் அணிந்திருந்தார். மும்பை செல்ல காத்திருந்த இன்னொரு கொள்ளையன் தனக்கு கிடைத்த தங்கநகையை விமான நிலையத்தின் கழிவறையில் மறைத்து வைத்து, செல்லும்போது எடுத்து செல்ல திட்டமிட்டிருந்தார். அந்த நகையும் மீட்கப்பட்டது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்