தூத்துக்குடி: செல்போன் டவர் அமைப்பதாக நில உரிமையாளரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி- பலே ஆசாமி சென்னையில் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெறலாம் என்று நில உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரூ.40.22 லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி சென்னையில் கைது செய்யப்பட்டார்.;

தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அவரது செல்போனில் தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்சொன்ன முதியவர் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அந்த நபர், தான் ஒரு தள பொறியாளர் என்றும் உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறி மேலும் சில நபர்களை முதியவருக்கு அறிமுகப்படுத்தி, செல்போன் டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, போக்குவரத்து கட்டணம், நியமன கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களை அந்த நபர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மேற்சொன்ன முதியவர் அந்த மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.40 லட்சத்து 21 ஆயிரத்து 950 ஐ செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த முதியவர் இதுகுறித்து நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டலில் (NCRP) புகார் பதிவு செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை அமிஞ்சிகரை பகுதியைச் சேர்ந்த சுப்பாராவ் மகன் முரளிகிருஷ்ணன் (வயது 51), மேற்சொன்ன முதியவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் முரளிகிருஷ்ணனை நேற்று முன்தினம் (25.03.2025) சென்னையில் வைத்து கைது செய்து, நேற்று (26.3.2025) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.