கோயம்பேட்டில் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூல்: 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

கோயம்பேட்டில் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-12-27 08:05 GMT

வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் கட்டாய பண வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனால் போக்குவரத்து போலீசார் சட்டையில் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அவர்கள், வாகன சோதனையில் ஈடுபடும்போது பணம் பெறுகிறார்களா? என்பதை கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தினந்தோறும் வெளி மாநிலங்கள் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகளிடம் கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போக்குவரத்து போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் வாகனங்களை மடக்கி கட்டாய வசூலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து கட்டாய பணம் வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்