மளிகை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும்
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவில் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த மாதாந்திர கூட்டம் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி பேசும்போது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் உள்ள பெரிய ஏரி மற்றும் சித்தேரியை ஆழப்படுத்த வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து மக்கள் நல சங்க தலைவர் ஹாரூன் பேசும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகம், வங்கிகளில் 10 ரூபாய் நாணயம் வாங்குவதில்லை. அது குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பும், அரசு ஆஸ்பத்திரியின் நுழைவாயில் முன்பும் வேகத்தடை அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருந்து காந்திரோடு, சக்தி விநாயகர் கோவில் வரை அளவீடு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ரேஷன் கடைகளில் திறப்பு நேரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.