போலி பத்திரப்பதிவு செய்ததாக புகார்: திருவள்ளூர் சார்பதிவாளர் பணியிடைநீக்கம் - பத்திரப்பதிவு ஐ.ஜி. நடவடிக்கை
திருவள்ளூரில் போலி பத்திரப்பதிவு செய்ததாக வந்த புகாரையடுத்து, திருவள்ளூர் சார்பதிவாளர் பணியிடைநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐ.ஜி. உத்தரவிட்டார்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் நகரத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்து இருந்தவர் சுமதி. இவர் ஆவடி மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்தை திருவள்ளூர் சார் பதிவு அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துடன் சேர்த்து திருவள்ளூர் சார்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சென்னையில் உள்ள பத்திரப்பதிவு ஐ.ஜி.யிடம் புகார் வந்ததையடுத்து, நேற்று முன்தினம் திருவள்ளூர் சார் பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐ.ஜி. சிவன் அருள் உத்தரவிட்டார்.
தான் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை அறியாத சார் பதிவாளர் சுமதி நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தார். அப்போது சென்னையில் உள்ள பத்திரப்பதிவு ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சார் பதிவாளர் சுமதியை பணியிடை நீக்கம் செய்ததற்கான கடிதம் பேக்ஸ் மூலம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சார் பதிவாளர் சுமதி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றார். இதனையடுத்து இணை சார் பதிவாளர் உமா சங்கரி பொறுப்பில் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது.