புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-27 18:45 GMT

வாகன ஓட்டிகள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்த சாலையில் வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

அருணாசலம், காளையார்கோவில்.

செய்தி எதிரொலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதியகோர்டு சாலையில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி வேண்டி நமது நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இந்த சாலையில் கால்வாய் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், காரைக்குடி.

விஷஜந்துகள் நடமாட்டம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சார்பதிவாளர் கட்டிடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தை சுற்றி புதர் மண்டி காணப்படுவதால் அவ்வப்போது விஷஜந்துகள் நடமாடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத், சிங்கம்புணரி.

தொற்றுநோய் அபாயம்

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்களால் பொதுமக்கள் தூக்கமின்றி அவதியடைகின்றனர். குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு போன்ற தொற்றுநோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபால், சாக்கோட்ைட.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது மோதுவதால் விபத்துகளும் நிகழ்கிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ராமநாதன், கல்லல்.

Tags:    

மேலும் செய்திகள்