நோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் மேலூர் கோட்டநத்தம்பட்டி விவசாய பாசன கால்வாயில் கழிவுநீர் தேக்கமடைந்து கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயினை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்துரு, மேலூர்.
பராமரிப்பற்ற பொதுக்கழிப்பறை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு கிராமத்தில் பொது கழிவறைகள் அனைத்தும் பராமரிப்பின்றி சேதமாகி உள்ளன. தண்ணீர் சரியாக வருவதில்லை. மழை பெய்தால் நீரானது கட்டிடத்தின் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த கழிப்பறைகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
பொதுமக்கள், அலங்காநல்லூர்.
சாலை வசதி தேவை
மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் புதுசுக்காம்பட்டி ஊராட்சி வினோபா காலனி பகுதியில் முறையான சாலை வசதி செய்யப்படவில்லை. மேலும் சாலை அமைக்கும் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமரன், மேலூர்.
மின்விளக்குகள் வேண்டும்
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பஞ்சாயத்து காளிகாப்பான் கிராமம் கே.ஆர்.கே.தெருவில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதன், கருப்பாயூரணி.
பாலம் அமைக்க வேண்டும்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சந்தையூர் கிராமத்திற்கு உட்பட்ட எஸ். மேலப்பட்டி பெருமாள் கோவில் தெரு அருந்ததியர் மக்கள் வசிக்கும் தெருவிற்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. இதனால் நீரோடை வழியாக சென்று உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. எனவே ஓடையின் குறுக்கே பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனிவாசகம், எஸ்.மேலப்பட்டி.