வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்காத நிதி நிறுவனம் மீது புகார்

ஆலங்குளத்தில் வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்காத நிதி நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

Update: 2022-05-19 16:55 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம்-அம்பை சாலையில் சேலத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு உள்ளது. இந்த நிதி நிறுவனம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் சேமிப்பு மற்றும் வைப்பு நிதி திரட்டியது. எனினும் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகையைத் திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நிதி நிறுவன தலைவர் தனது ஊழியர்களுடன் ஆலங்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மண்டபத்திற்கு சென்று தங்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். தகவல் அறிந்த வியாபாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டு, வியாபாரிகள் தரப்பில் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிதி நிறுவன தலைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை 3 மாதங்களுக்குள் தருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்