கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மீது புகாா்
கட்சி கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மீது உறுப்பினர் ஒருவர் புகார் கூறினார்.
கும்பகோணம்;
கட்சி கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மீது உறுப்பினர் ஒருவர் புகார் கூறினார்.
மாநகராட்சி கூட்டம்
கும்பகோணம் மாநகராட்சிக்குழு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சுப. தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெண் கவுன்சிலர் பெனாசிர் நிஹார் எழுந்து கடந்த மாதம் (ஜூலை) இந்து அமைப்புகள் சார்பில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழாவுக்கு கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து புனித நீர் அனுப்பும் நிகழ்ச்சியில் மதசார்பற்ற கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டது தவறு. கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.
மேயர் பதில்
இதற்கு பதில் அளித்து மேயர் சரவணன் பேசினார். அப்போது அவர், தான் அந்த வழியாக சென்றபோது இந்து அமைப்பினர் வலுக்கட்டாயமாக தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் அங்கு சென்றபோது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சூரியனார் கோவில் ஆதீனம் புனித நீர் அடங்கிய குடத்தை தனது கையில் கொடுத்ததால் வேறு வழியின்றி அதை வாங்கிக் கொண்டதாகவும் இதற்கும் தான் சார்ந்துள்ள கட்சியின் கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என பதில் அளித்தார்.
அவப்பெயர்
இதைத்தொடர்ந்து பேசிய துணை மேயர் சுப. தமிழழகன், மேயர் சரவணன் வெறும் கட்சியின் உறுப்பினராக இருந்து மட்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அது பெரிய விஷயம் இல்லை. தற்போது கும்பகோணம் மாநகராட்சியின் மேயராக 48 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பொறுப்பில் உள்ள போது தான் சார்ந்த கட்சி கொள்கைகளுக்கும் கூட்டணி கட்சியினரின் கொள்கைகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அது கட்சிக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.எனவே இனியாவது மேயர் பொறுப்புக்கு ஏற்ற வகையில் எந்த சூழலிலும் நிதானித்து கட்சிக்கும் சக உறுப்பினர்களுக்கும் எந்தவித அவப்பெயரும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாதாள சாக்கடை
இதனைத் தொடர்ந்து பேசிய மற்ற உறுப்பினர்கள் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய துணை மேயர் சுப. தமிழழகன், வருகிற 1-ந் தேதி இதுகுறித்து கும்பகோணம் எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நகர் நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
குப்பைகள்
இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் செல்வம், அய்யப்பன், முருகன் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விளக்கு சரியாக எரியவில்லை. குப்பைகள் சேகரிக்க பணியாளர்கள் வருவதில்லை வண்ணாங்கண்ணி பகுதியில் வசிக்கும் பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகிறது என கூறினா். இதற்கு பதில் அளித்து நகர் நல அலுவலர் பேசினார். அப்போது , மாநகராட்சி பகுதியில் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் குப்பைகளை சேகரிக்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.ஒரு சில பகுதிகளில் பணியாளர்கள் விடுப்பு எடுக்கும்போது அந்த நாளில் மாற்று பணியாளர்களை அனுப்பி குப்பைகளை சேகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.