பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 21-ந் தேதி கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடக்கிறது.

Update: 2023-06-15 18:45 GMT

இது தொடர்பாக கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

21-ந் தேதி நடக்கிறது

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2022-23-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், வருகிற 21-ந் தேதி காலை 9 மணிக்கு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே தேர்வு செய்து, முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

பரிசு விவரம்

போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடக்கும் நாளில் போட்டி தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநில போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்