உழவர் சந்தைக்கு ெவளியே வந்துகாய்கறி விற்கும் வியாபாரிகள்

பொதுமக்கள் வராததால் வியாபாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள் மாற்று இடத்தில் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-08-05 18:45 GMT

சிங்கம்புணரி, 

பொதுமக்கள் வராததால் வியாபாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள் மாற்று இடத்தில் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

உழவர் சந்தை

சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு திண்டுக்கல் சாலை கிருங்கா கோட்டை விலக்கு அருகே கால்நடை மருத்துவமனை அருகில் உழவர் சந்தை கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயனின்றி கிடந்தது. இந்நிலையில் உழவர் சந்தை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை எனக்கூறப்படுகிறது.

ஏனெனில் இந்த சந்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் 2 கி.மீ. தூரம் வந்து காய்கறிகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் சந்தையில் உள்ள வியாபாரிகள் மீண்டும் பெரிய கடை வீதியில் கடை அமைத்து காலை 6 மணி முதல் 9 மணி வரை கடைகள் நடத்தினர்.

மாற்று இடத்தில்

இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அவர்களை மீண்டும் உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுப்பி வைத்தனர். ஆனால் பொதுமக்கள் சந்தைக்கு அதிகமாக வராததால் வியாபாரிகள் போதிய விற்பனை இன்றி காய்கறிகளை கால்வாயில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் கூறுகையில், இந்த சந்தை ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளது. மேலும் சந்தை நுழைவாயில் இருபுறங்களிலும் உழவர் உற்பத்தி கம்பெனி சார்பில் 2 பல்பொருள் அங்காடி கட்டிடம் கட்டப்பட்டதால் வியாபாரங்கள் இல்லாமல் தவிர்த்து வருகின்றோம். இதனால் இங்கு கடை வைத்து இருப்பவர்களுக்கு எந்தவிதமான வியாபாரமும் நடைபெறவில்லை.

எனவே எங்களுக்கு சிங்கம்புணரி நகர் பகுதிக்குள் குறிப்பாக பேரூராட்சிக்குட்பட்ட வார சந்தை பகுதியில் வாரச்சந்தை நாளில் தவிர மற்ற நாட்களில் கடைகள் அமைத்துக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்