கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவரை கொன்று புதைத்த சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் விவசாயி. இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி. ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்த தம்பதியின் மகன் ஜெகன்ஸ்ரீ (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் கழுதூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெகன்ஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் ஜெகன்ஸ்ரீயை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெகன்ஸ்ரீயை தேடிவந்தனர்.

உடல் தோண்டி எடுப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கூத்தக்குடி காப்புக்காட்டில் வாலிபர் ஒருவரது உடல் பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் தாசில்தார் சத்தியநாராயணன் முன்னிலையில் அங்கு மண்ணில் புதைக்கப்பட்டிருந்தவரின் உடலை தோண்டி எடுத்து பார்த்தபோது, அது மாயமான ஜெகன்ஸ்ரீ என்பது தெரிந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தது. கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஜெகன்ஸ்ரீயை மர்மநபர்கள் கொலை செய்து, உடலை புதைத்தது தெரிந்தது. இதையடுத்து ஜெகன்ஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்தை அறுத்து கொலை

போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அது பற்றிய விவரம் வருமாறு:-

ஜெகன்ஸ்ரீக்கும், அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32) என்பவருக்கும் கடந்த கார்த்திகை தீபத்தின்போது சுருள் சுற்றியபோது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், ஜெகன்ஸ்ரீயை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி அய்யப்பன் தனது நண்பர்களான ரவிச்சந்திரன் மகன் அபிலரசன் (27), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20) மற்றும் 17 வயதுடைய சிறுவனுடன் சேர்ந்து மதுகுடிக்க ஜெகன்ஸ்ரீயை காப்புக்காட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு ஜெகன்ஸ்ரீக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்தனர். பின்னர் அய்யப்பன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து ஜெகன்ஸ்ரீயை சரமாரியாக குத்தினர். மேலும் கத்தியால் அவரது கழுத்தையும் அறுத்து கொலை செய்துள்ளனர்.

4 பேர் கைது

இதையடுத்து அங்கேயே குழிதோண்டி ஜெகன்ஸ்ரீயின் உடலை புதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிலர் நடந்து வந்ததால், ஜெகன்ஸ்ரீயின் உடலை பாதி புதைத்த நிலையிலேயே விட்டு விட்டு அங்கிருந்து 4 பேரும் ஓடிவிட்டனர். மேற்கண்டவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அய்யப்பன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மது குடிக்க அழைத்துச்சென்று கல்லூரி மாணவரை கொலை செய்து உடலை புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்