ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2023-08-05 20:48 GMT

ஜீயபுரம்:

கல்லூரி மாணவர்கள்

திருச்சி அருகே முக்கொம்பில் சுற்றுலா மையம் உள்ளது. மேலும் முக்கொம்பு காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(வயது 20). இவர் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்தை சேர்ந்த செந்தில்முருகனின் மகன் ஜனார்த்தனன்(20) என்பவரும், அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் விடுதியில் தங்கியிருப்பவர்களில் 14 மாணவர்கள் சேர்ந்து முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றனர். அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, மதிய நேரத்தில் காவிரி ஆற்றில் குளித்தனர். ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்லும் நிலையில், அனைவரும் 2-வது மதகு பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் திருப்பராய்த்துறை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த நிகேஷ் என்பவர் குளித்து கொண்டிருந்தார்.

தண்ணீரில் மூழ்கினர்

அப்போது ஆற்றில் குளித்த மாணவர்களில் லோகேஷ், ஜனார்த்தனன் உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த நிகேஷ், உடனடியாக சுதாரித்துக்கொண்டு 2 பேரை காப்பாற்றினார். ஆனால் லோகேஷ், ஜனார்த்தனன் ஆகியோரை மீட்க முடியவில்லை. இதனால் அவர் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அதைக்கேட்டு கரையில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி வருவதற்குள் லோகேஷ், ஜனார்த்தனன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர்.

இதையடுத்து அவர்களை தண்ணீரில் தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்காததால் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுமூலம் ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பிணமாக மீட்பு

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஜனார்த்தனனை பிணமாக மீட்டனர். அவரது உடலை கண்டு, அவருடன் வந்த கல்லூரி மாணவர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லோகேஷை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் அவரை தேடும் பணி நடக்கிறது. இதற்கிடையே ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியை ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

எச்சரிக்கையை மீறி...

இந்த சம்பவம் பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், காவிரியில் தற்போது தண்ணீர் அதிகமாக வருகிறது. யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை மற்றும் ஜீயபுரம் போலீசார் மூலம் எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. இதையும் மீறி கல்லூரி மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர். போலீசார் எச்சரித்தாலும் அவர்களின் அறிவுரையை கேட்காமல் ஆற்றில் குளிப்பதால், இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்