பி.ஏ.பி.வாய்க்கால் தண்ணீரை நிறுத்தி, மாணவரை கண்டுபிடிக்க வேண்டும்

பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட மாணவரை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் வாய்க்கால் தண்ணீரை நிறுத்தி தேட வேண்டும் என்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2023-02-23 15:59 GMT

பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட மாணவரை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் வாய்க்கால் தண்ணீரை நிறுத்தி தேட வேண்டும் என்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

மாணவர் மாயம்

திருப்பூர் நல்லூரை சேர்ந்த சங்கீதாவின் மகன் சஞ்சய் (வயது 20). இவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 19-ந் தேதி தனது நண்பர்களுடன் தெற்கு அவினாசிபாளையம் அருகே தாராபுரம் ரோடு ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்ற போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

அவர் என்ன ஆனார்? என்று இதுவரை தெரியவில்லை. இதையடுத்து அவருடைய குடும்பத்தினரும், தீயணைப்புத்துறையினரும் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக பாய்வதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாணவர் காணாமல் போய் 4 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தவித தகவலும் இல்லை.

மாணவர்கள் திரண்டு வந்தனர்

இதைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சஞ்சயின் தாயார், குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திரளான மாணவர்கள் வந்ததால் அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் நிறுத்தினார்கள். சஞ்சயின் குடும்பத்தினர், கல்லூரி மாணவர்கள் சிலர், பேராசிரியர்களை கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர். அவர்கள் கலெக்டர் வினீத்தை சந்தித்தனர். சஞ்சயின் தாயார் கண்ணீருடன், தனது மகனை கண்டுபிடித்து கொடுக்குமாறு கூறினார். பிரதான வாய்க்காலில் தண்ணீர் அதிகம் செல்வதால் மீட்புபணி நடைபெறவில்லை. தண்ணீரை நிறுத்தி தேடுதல் பணியை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர், பி.ஏ.பி. அதிகாரிகளை அழைத்து, ஆண்டிப்பாளையம் பிரதான கால்வாயில் தண்ணீர் அளவை குறைத்து தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறினார். பி.ஏ.பி. அதிகாரிகள் கூறும்போது, 'திருமூர்த்தி அணையில் தண்ணீரை நிறுத்தினால் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிப்பாளையம் பகுதியில் தண்ணீர் குறைய 2 நாட்கள் ஆகும். மாற்று வழி குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி வருகிறோம். தேடுதல் பணிக்கு ஒத்துழைக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்