தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு இழப்பீடு வழங்க கோரிக்கை

Update: 2022-11-24 18:45 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்.

ஏரி நிரம்பியது

காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறக்கூடிய தடுப்பணை சுவரின் உயரம் 1½ அடி அளவிற்கு உயர்த்தி கட்டப்பட்டது. ஏரியில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஏரி நிரம்பியது.

இதன் காரணமாக ஏரியில் கூடுதல் தண்ணீர் தேங்கி ஏரியை சுற்றி தாழ்வான பகுதிகளில் உள்ள கீழ் சவுளுப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. தண்ணீர் வெளியேற வடிகால் வசதி இல்லாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், அவரை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

கோரிக்கை மனு

இந்த நிலையில் அந்த பகுதி விவசாயிகள் நேற்று அழுகிய நெற்பயிர்களுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பந்தாரஅள்ளி ஏரி தடுப்பணை சுவற்றை உயர்த்தியதால் எங்களது விலை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் இழப்பதற்கு ஆளாகியுள்ளோம். இதுதவிர விவசாய கிணறுகளில் சரிவு ஏற்பட்டதால் மின் மோட்டார்கள், ஆயில் என்ஜின்கள் தண்ணீருக்குள் மூழ்கி பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இழப்பீடு

எனவே விளை நிலங்களுக்குள் மீண்டும் தண்ணீர் புகுந்துவிடாதபடி தடுப்பணை உயரத்தை குறைத்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காரிமங்கலம் தாசில்தார் அலுவலகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளோம். தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்க வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்